ஆங்கிலத்திற்கு முன்னும் பின்னும்
July 22, 2013
சாலையோரம் சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த குழந்தைகள்
“ரோடு ரோடாகப்” பிச்சை எடுக்கும்
துயரம்!
பள்ளிகூடத்தில் கல்வி கற்று
பட்டம் பெற்ற காலம் அழிந்து
“ஸ்கூல்”க்கு சென்று உரு செய்யும்
உண்மை!
வரி போக வருமானத்தை
வங்கியில் சேமித்தது மறைந்து,
வரியை ஏய்க்க தகாத வருமானத்தை
“பேங்க்”கில் வைக்கும்
வேதனை!
ஆங்கிலம் வந்த பின்னர்
தமிழ் எதுவென்பதும் தெரியவில்லை
கலாச்சாரமும் காணவில்லை!
படித்’தேன்’, சுவைத்’தேன்’, ரசித்’தேன்’
என தேனாய் பாய்ந்த
எந்தன் செந்’தமிழை’யே
நுனிநாவில் “டமிழ்” எனக் கொலை செய்யும்
இம்மண்ணவர் சிலர் இனியாவது
தமிழில் விழித்து
தன் பாவம் போக்கிக் கொள்ளட்டும்!
அதுவரையில் தவறியும்
அந்த சிலரை அழைக்க வேண்டாம்
தமிழர்கள் என்று!